சென்னை, செப்டம்பர் 01 (டி.என்.எஸ்) பவர் ஸ்டாரை பார்த்தாலே குபீர் என்று சிரிக்கும் ரசிகர்கள், அவரை வில்லனாக பார்த்தால் என்ன செய்வார்கள், குஷியில் குதிக்க மாட்டார்களா! அப்படித்தான், பவர் ஸ்டாரை வில்லனாக்கி, ரசிகர்களை சும்மா நச்சுன்னு குஷியாக்கியிருக்கிறார் இயக்குனர் வெங்கடேஷ்.
தமன் தான் படத்தின் ஹீரோ என்றாலும், படத்தில் என்னவோ அறிமுக பாடல், அசத்தல் வசனம் என்று அனைத்தும் பவர் ஸ்டாருக்கே!
ஒரு நகைச்சுவைப் படத்திற்கு எப்படி வேண்டுமானாலும் திரைக்கதை அமைக்கலாம் என்பது தமிழ் சினிமாவின் எழுதப்படாத சட்டமாகிவிட்டது. அந்த சட்டத்தை பயன்படுத்தி தான் சும்மா நச்சுன்னு இருக்கு, படத்தின் திரைக்கதையையும் இயக்குனர் வெங்கடேஷ் எழுதியிருக்கிறார்.
காமெடி படம் என்பதால், படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் முதல் காதல் காட்சிகள் வரை அனைத்துமே காமெடி காட்சிகள் தான்.
இது போதாது என்று, மற்றவர்களைப் பார்த்து பவர் ஸ்டார், அடிக்கடி லூசு பயலே, முட்டாள் பயலே என்று திட்டுகிறார். இது ஒன்று போதாதா விழுந்து விழுந்து சிரிக்க.
"அரே ஒ சம்போ" என்று பவர் ஸ்டார் சொல்ல, அதற்கு அவருடைய ஆட்கள், "பாஸ் இன்றைக்கு சாம்பார் இல்லை, காரக்கொழம்பு தான்" என்று சொல்வார்கள். இது போல படத்தில் தம்பி ராமையா, தமன், ஈரோடு மகேஷ், கிரேன் மனோகர் என்று பலர், பல டைமிங் ஜோக்குகளை படம் முழுவதும் சொல்கிறார்கள். என்ன, அது சரியான டைமிங்கில் சொல்லாததால் ரசிகர்கள் சில இடங்களில் சிரிக்காமல் முழிக்கிறார்கள்.
இவர்கள் மிஸ் பண்ணினால் என்ன, பவர் இருக்கிறாரே! என்று இயக்குனர், எல்லாம் பவரே என்று நம்பி, பவருக்கு பல பவரான காட்சிகளை கொடுத்திருக்கிறார். பவர் ஸ்டாரும் தனது பங்கிற்கு, எப்படி எப்படியோ சொதப்பி ரசிகர்களை ஒரு வழியாக சிரிக்க வைத்துவிடுகிறார்.
துன்பம் வரும் நேரத்தில் கூட சிரிக்க வேண்டும் என்று வள்ளுவர் சொன்னது போல, இது போன்ற காமெடிப் படங்களைப் பார்க்கும் போது சிரிப்பு வரவில்லை என்றாலும், சிரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு திரையரங்கிற்கு செல்லும் ரசிகர்களுக்கு 'சும்மா நச்சுன்னு இருக்கு' கிக்கான ஒரு காமெடி படம் தான்.
No comments:
Post a Comment