இயக்குநர் ராஜேஷின் வழியில் அவரது சீடரான அறிமுக இயக்குநர் பொன்ராம் படம் புல்லா சிரிக்க வைச்சா போதும் பாஸ்..ஜெயிச்சிடலாம் என முடிவெடுத்து சென்றிருக்கிறார். ராஜேஷ் அளவுக்கு காமெடியில் கலக்கவில்லை என்றாலும் ஓரளவுக்கு சமாளித்து ஜெயித்துவிட்டார், சிவகார்த்திகேயன் புண்ணியத்தில்.
சில நேரங்களில் சில நடிகர்களுக்கென ஒரு விதமாய் உருவாகும் இமேஜ் அவர்கள் நடிக்கும் எல்லாப் படங்களிலிலும் ஊடுருவும். அதுவே ப்ளஸ் பாய்ண்டாகி அந்தப் படத்தை ஓட வைக்கும். ராமராஜனுக்கு ஒரு காலத்தில் அப்படி இருந்தது. விமர்சனங்ளுக்கு அப்பாற்பட்டு அந்த படங்கள் வந்துகொண்டேயிருக்கும்..ஓடிக்கொண்டேயிருக்கும். ராஜ்கிரணுக்கும் அப்படி ஒரு காலம் இருந்தது.
இப்போது சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு காலம் போலிருக்கிறது. இந்தப் படத்தை விமர்சிக்க துவங்கினால் பக்கம் பக்கமாய் போகலாம். ஆனால் அது அர்த்தமற்றது. ஏனெனில் படம் கதையையோ திரைக்கதையையோ நம்பியெல்லாம் எடுக்கப்படவில்லை. எப்படி ஒரு காலத்தில் மைக் மோகன் படமென்றால் ஒரு மைக்கும், 5 இளையராஜா பாட்டும் போதுமென்று படமெடுத்தார்களோ, எப்படி ராமராஜன் படத்திற்கு இதெல்லாம் போதும் என வரிசையாய் எடுத்தார்களோ.. அப்படி ஒரு கணக்கில் சிவகார்த்தியேன் படமென்றால் இதெல்லாம் போதும் என எடுக்கப்பட்ட படம் இது.
தன் பெண் காதல் கீதல் என விழுந்துவிடக்கூடாது என எச்சரிக்கையாய் அப்பா சத்யராஜ் இருக்க, அதையும் மீறி அனைவரும் எதிர்பார்த்தது போலவே அவரது மகள் ஊரில் வெட்டியாய் திரியும் சிவகார்த்திகேயனை காதலிக்க, அது வளர்ந்து அவர் வீட்டுக்குள்ளேயே போய் ரொமான்ஸ் வரைக்கும் போக, அதைப் பார்த்து அவர் டென்சனாகி வேறு ஒரு மாப்பிள்ளையை நிச்சயிக்க அதைத்தாண்டி காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்ற நாம் பார்த்த 1813 படங்களின் கதைதான் இதுவும். அதைக் காமெடியாய் சொல்லி எஸ்கேப்பாயிருக்கிறார் இயக்குநர்.
கதாநாயகி அறிமுகம் ஸ்ரீதிவ்யா.. பள்ளியில் படிக்கும் பெண் என்ற ரோல் கச்சிதமாய் பொருந்துகிறது. சினிமாத்தனம் ஏதுமில்லாத இயல்பான முகம்.
இந்தப் படத்தின் வெற்றியை தீர்மாணித்ததில் இமானின் பாடல்களின் பங்கு மிக முக்கியமானது. சூப்பர் ஹிட்டான ஊதா ரிப்பன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல்கள் கலக்கல் ரகம். அந்த லவ் பெயிலியர் பாடல் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் தியேட்டரில் ரசிகர்களை ஆடவைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் ‘பார்க்காதே’ பாடல் இனிமையிலும் இனிமை.
அறிமுக காட்சியில் சத்யராஜை கைது செய்யும் போது அவருக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கும், பின்னால் வரும் அவரது காட்சிகளுக்கும் சம்பந்தம் இல்லாத அளவுக்கு பொருந்தாமல் இருப்பது உறுத்தல்.
காதல் வரும் காட்சிகள் ரொம்ப சாதாரணமாய் வைக்கப்பட்டிருப்பது, கதையில் வரும் சம்பவங்களில் எதுவுமே சீரியஸ் இல்லாமல் இருப்பது, வெட்டியாய் திரிபவனை வெறுக்கும் சத்யராஜ், அவரது மனைவி ஸ்ரீரஞ்சனி இருவரும் மனது மாறி மாப்பிள்ளையாய் ஏற்றுக்கொள்ளும் காட்சியை விளையாட்டுத்தனமாய் வைத்திருப்பது என படத்தில் ஆங்காங்கே சொதப்பல்கள் நிறைந்திருக்கின்றன. ஆனால் காமெடி என்ற ஒரே பாயிண்டில் இவை அனைத்தையும் மறக்க வைத்து படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.
சூரிக்கு கதாநாயகனுக்கு இணையான ரோல். அவரது வளர்ச்சி பலர் போறாமைப்படும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சி வெறும் சந்தர்ப்ப சூழ்நிலையினால் வந்தது..இதை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் அவர் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். இந்த படத்தில் சும்மா ஒப்பேத்தியிருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்றாலும், ஊரில் நாலு பேர் நாலு விதமாய் பேசுவார்கள் என்பதற்காகவே தம் குழந்தைகளின் காதலை வரட்டுத்தனமாய் எதிர்க்கும் தகப்பனின் மனநிலையை படத்தின் அடிப்படையாய் வைத்துக்கொண்டு அதையும் க்ளைமாக்ஸில் கலாய்த்திருப்பது பாராட்டவேண்டிய விசயம்தான்.
படம் பார்த்துவிட்டு வெளியே வந்து யோசித்தால் அவ்வளவு பெரிய காமெடி ஒண்ணும் இல்லையே எனத் தோனும் படம்தான் இது. ஆனால் படம் பார்க்கும் போது போரடிக்காமல் டைம்பாஸ் ஆகிறது என்பதே ஒரு (காமெடி) படத்தின் வெற்றிக்கு போதுமானது என்ற வகையில் இதுவும் “ஒரு முறை பார்க்கலாம்” படமே!
No comments:
Post a Comment