Breaking News

Sunday, 18 August 2013

சென்னை எக்ஸ்பிரஸ் - விமர்சனம்

நடிப்பு: ஷாரூக்கான், தீபிகா படுகோன், சத்யராஜ்
இசை: விஷால் சேகர்
ஒளிப்பதிவு: டட்லீ
தயாரிப்பு: கவுரி கான், ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய்கபூர்
இயக்கம்: ரோஹித் ஷெட்டி ஒரு பொழுதுபோக்குப் படத்தை எப்படி சுவாரஸ்யமாகத் தரவேண்டும் என்பதற்கு சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு நல்ல உதாரணம். கட்டாய திருமணம் செய்து வைக்கப் பார்க்கும் அப்பா, தப்பிக்க முயன்று மாட்டிக் கொள்ளும் நாயகி, காப்பாற்ற வரும் ஹீரோ, குறுக்கே வரும் வில்லன், அவனை ஜெயித்து காதலை வெல்லும் க்ளைமாக்ஸ்...


-இந்தக் கதையை எத்தனையோ தமிழ், இந்திப் படங்களில் பார்த்திருக்கிறோம். இதே கதைதான் சென்னை எக்ஸ்பிரஸிலும். ஆனால் சொன்ன விதம், காட்சிகளின் வர்ணஜாலம் பார்வையாளர்களை அனுபவித்துப் பார்க்க வைக்கிறது. அங்குதான் ஒரு இயக்குநர் தன்னை வெளிப்படுத்துகிறார்! இத்தனைக்கும் கொஞ்சம் முத்து, கொஞ்சம் கில்லி, கொஞ்சம் அலெக்ஸ் பாண்டியன் என காட்சிகளில் 'காப்பி' தெரிந்தாலும், அவற்றை பிரயோகித்த விதத்தில் கிண்டலுக்கு ஆளாகாமல் தப்பிக்கிறது படம்.


தன் தாத்தா அஸ்தியைக் கரைக்க ராமேஸ்வரம் செல்கிறார் ஷாரூக்கான். வழியில் எதேச்சையாக தீபிகா படுகோனை ரயிலில் சந்திக்கிறார். அப்பா தனக்கு செய்து வைக்கவிருந்த கட்டாயக் கல்யாணத்தை எதிர்த்து ஓடிப்போய் மீண்டும் அப்பாவின் அடியாட்களிடம் சிக்கிக் கொண்ட நிலையில் இருக்கிறார் தீபிகா. ஷாரூக்கிடம் தனக்கு உதவக் கோருகிறார்.


ஆனால் ஒருகட்டத்தில் ஷாரூக்கையே தன் காதலனாக தந்தையிடம் காட்ட, அவரும் காதலுக்கு சம்மதம் சொல்ல, வில்லன் என்ட்ரியாகிறார். வில்லனை ஜெயித்து தீபிகாவை எப்படி கைப்பிடிக்கிறார் ஷாரூக் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. ஷாரூக்கான் - தீபிகா இருவரும் படத்துக்கு பெரும் பலம்.

ஒரு பொழுதுபோக்குப் படத்தில் கதாநாயகியைப் பயன்படுத்தும் வித்தையை பாலிவுட்காரர்களிடமிருந்து இங்குள்ள இயக்குநர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

சும்மா டூயட்டுக்கும், க்ளைமாக்ஸுக்கும மட்டுமே ஹீரோயினை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தவில்லை. ஷாரூக்கான் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற நினைப்பே இல்லாமல், இந்தப் படத்தில் இயக்குநர் செய்யச் சொன்ன அத்தனை கோமாளித்தனங்களையும் பண்ணியிருக்கிறார். தீபிகாவைக் காப்பாற்ற அவர் செய்ய முயலும் சாகசங்கள் அனைத்தும் காமெடியாக முடிய, நமக்கு ஷாரூக் மீதான மரியாதை கூடுகிறது.

வேட்டி கட்டிக் கொண்டு டூயட் பாடுவது, தமிழை உச்சரிக்க முயன்று தடுமாறுவது, சத்யராஜையே என்னமா கண்ணு என கலாய்ப்பது என கலக்கியிருக்கிறார் ஷாரூக்.


மனிதர் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்தால் இன்றைய முன்னணி நடிகர்கள் பலருக்கு வயிற்றில் புளி கரைக்கும். அப்படியொரு வரவேற்பு பார்வையாளர்களிடம்.

தீபிகா தனது அழகு, அசத்தல் நடிப்பால் அசரடிக்கிறார். தமிழ் வசனங்களுக்கு அவரே குரல் கொடுத்திருப்பது, கேட்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மெச்சத் தக்க முயற்சி.

சத்யராஜ் உள்பட நிறைய தமிழ் நடிகர்கள் முரட்டு மீசை, வேட்டி சட்டையில் வருகிறார்கள். நிறைய இடங்களில் தமிழ் வசனங்கள். நிச்சயம் இது வட இந்திய ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். தமிழர்களுக்கு இந்திப் படம் பார்ப்பது போலவே இருக்காது.

ரஜினிக்கு மரியாதை என்ற பெயரில் கடைசியில் இடம்பெறும் அந்த லுங்கி டான்ஸ் முடியும் வரை கூட்டம் காத்திருக்கிறது. ஷாரூக்கானின் புத்திசாலித்தனத்துக்கு இன்னொரு சான்று இது. டட்லீயின் ஒளிப்பதிவு, சேகர் விஷாலின் இசை படத்துக்கு பக்க பலங்கள். சென்னை எக்ஸ்பிரஸ்... இந்தி பேசும் கலர்ஃபுல் தமிழ் சினிமா... Just Enjoy the show!

More Latest News Click This Link : http://bit.ly/14NOzdE

1 comment:

Designed By Blogger Templates