பாட்டுக்குயில்கள் எல்லாரும் ஒரே கூட்டுக் குயில்களாக அங்கே குழுமியிருந்தது எதற்காக? கர்நாடகாவின் உபரி நீர் காவிரியில் வரும்போது தஞ்சை விவசாயிக்கு ஒரு சந்தோஷம் கிடைக்குமே, அதுபோன்றதொரு எக்ஸ்ட்ரா வருமானத்திற்காக! யெஸ்...

கே.ஜே.யேசுதாஸ், பி.சுசீலா, எஸ்.பி.பி., ஹரிஹரன் உள்ளிட்ட பழைய தலைமுறையும், கார்த்திக், மஹதி போன்ற புதிய தலைமுறையும் சேர்ந்து வந்து சந்தோஷப்பட்டது தங்களுக்கு கிடைக்கப் போகும் ராயல் டிக்காகதான். மத்திய அரசின் புதிய சட்டத்தின்படி தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ, இணைய தளத்திலோ அல்லது இதுபோன்ற எதுவாக இருந்தாலும் அதில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை இவர்களுக்கு ராயல்டியாக வழங்க வேண்டுமாம். இந்த புதிய சட்டம் செப்டம்பர் மாதத்திலிருந்து அமலுக்கு வருகிறது.
சோர்வாக கிடப்பவனுக்கு கிடைத்த நாயர் கடை டீ மாதிரி இந்த ராயல் டியும் பாடகர்களின் சோர்வை போக்கும் என்பது நிச்சயம். என்றாலும், இசையமைப்பாளருக்கு ராயல்டி, பாடலாசிரியருக்கு ராயல்டி, இப்போது உங்களுக்கும் ராயல்டி என்றால், இந்த பாடல்களை ஆசையோடு கேட்கிற ரசிகன் தலையில்தான் இத்தனைக்கும் கை வைப்பார்கள்? அப்படியென்றால் ஐம்பது ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு ஆடியோ சிடி தானாக விலையேறுமே, இதை ரசிகன் தாங்குவானா? அவனது சொந்த சோகத்துக்கு ஒரு பாடலை கேட்டால், அதையே மேலும் சோகமாக்கிவிடுவீர்கள் போலிருக்கிறதே... என்றெல்லாம் மீடியா பந்தாட ஆரம்பித்தது.
பதறிப்போன எஸ்.பி.பி, ‘ஐயா இதை பெரிசா விவாதித்து பிரச்சனையை உண்டாக்கிடாதீங்க. உங்களுக்காக கடந்த ஐம்பது அறுபது வருஷமா பாடுற எங்களுக்கு அந்த பாடல்களை பயன்படுத்துகிறவர்கள் கொடுக்கிற சிறு காணிக்கை இது. இதை ஏன் தவறா பார்க்குறீங்க? நாங்க யாரையும் வற்புறுத்தி கேட்கல. சண்டை போடல. அதுலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையும் இல்ல. எதிர்காலத்துல இந்த பாடல்களுக்கு இன்ஸ்ட்ரூமென்ட் வாசிச்ச கலைஞர்களுக்கும் ராயல்டி கிடைச்சா அதுவும் எங்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்’ என்றார்.
இப்படி வரும் பணத்தை முறையாக பிரித்துக் கொடுக்க ‘இஸ்ரா’ என்ற அமைப்பையும் துவங்கியிருக்கிறார்கள் பாடகர்கள். இப்பதான் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கு. இதன் பொறுப்பு தலைவர்களாக தென்னிந்தியாவை சேர்ந்த பாடகர்களும் விரைவில் இடம் பெறுவார்கள் என்றார் எஸ்.பி.பி.
குயில் முட்டையா இருந்தா என்ன, கோழி முட்டையா இருந்தா என்ன? ஆம்லெட்டுக்கு ஆவுமா என்று எதையும் விவகாரமாகவே டீல் பண்ணும் உலகம், இந்த விஷயத்தையும் கிண்டி கிழங்கெடுக்கும். அதற்கெல்லாம் அசராமல் நல்லா சாப்பிட்டு தெம்பா பாடுங்க குயில்களே....
Thanks : tamilcinema
No comments:
Post a Comment