Breaking News

Tuesday, 30 July 2013

'இந்த பிரஸ்மீட் எந்த சுடுகாட்ல?' -கனகாவும், கலக்கமும்!

உலகத்தில் யாருக்குமே கிடைக்காத பெரும் பேறு என்பதா? அல்லது பெரும் அவஸ்தை என்பதா? இன்று கண்ணெதிரே தன் சாவு செய்தியை படித்தும், பார்த்தும், துக்க விசாரிப்புகளை கேட்டும் நொந்தே போயிருப்பார் கனகா.

கரகாட்டக்காரன் கனகாவின் வாழ்வில் இப்படி கரகாட்டம் ஆடிவிட்டு போன, அயோக்கிய சிகாமணி யாரோ? அவன் நல்லாயிருக்கட்டும்... அந்த நபர் கிளப்பிவிட்ட வதந்தியை நம்பி இணையதளங்களும், இணையதளங்களின் அறிவிப்பை கேட்டு நாளிதழ்களும், நாளிதழ்களின் வரிகளை படித்து தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு கனகாவை புற்றுநோயில் தள்ள, ஜம்மென சென்னையில் இருந்தே இவற்றையெல்லாம் நோட்டமிட்டுக் கொண்டிருந்தார் அவர். (தப்பித்தது நமது இணையதளம் மட்டுமே)

இன்று இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல இன்னொரு செய்தி. கனகாவை சாகடித்தது பிற்பகல் வந்த செய்தி. கனகாவின் வாழ்க்கை வரலாற்றை கண்ணீரோடு எழுதி முடித்திருந்தார்கள் நிருபர்கள். இந்த நேரத்தில்தான் அந்த விட்டலாச்சார்யா டைப் அழைப்பு. 'கனகா பிரஸ்மீட் வச்சுருக்காங்க. கொஞ்சம் வந்துட்டு போறீங்களா?' என்று.

இந்த பிரஸ்மீட் எந்த சுடுகாட்ல என்று கேட்கிற அளவுக்கு நாக்கு தள்ளிய நிருபர்கள் ராஜா அண்ணாமலைபுரத்திலிருக்கும் அவரது வீட்டுக்கு பீட்சா பாய் போல சுட சுட போய் இறங்க, அந்த சூடு குறையாமல் அர்ச்சனை செய்தார் கனகா.

நல்லாதான் இருக்கேன். பார்த்துக்கங்க. வேணும்னா கிள்ளி கூட பார்த்துக்கங்க என்று அவர் சொல்ல சொல்ல, கால் பூமியில் படுமா என்று சுடிதாருக்கு கீழே நோட்டமிட்டார்கள் சிலர். எப்படியோ, சிரித்துக்கொண்டே எல்லாரையும் வழி அனுப்பி வைத்தார் கனகா. இவருக்கு புற்று நோயெல்லாம் இல்லவே இல்லையாம்.

கனகா இன்னும் நு£று வருஷம் வாழட்டும்... கொஞ்சம் விட்டு வைங்க நிருபர்களே! 

No comments:

Post a Comment

Designed By Blogger Templates