Breaking News

Wednesday, 31 July 2013

'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' -ஒரு புதிய வரவு!

ஒரு காலத்தில் தோசைக்கல் சைசுக்கு இருந்த இசைத்தட்டு, இன்று குறுந்தகடாக குறுகிவிட்டது. இப்படி குறுகியது தகடு மட்டுமல்ல, தமிழ்சினிமாவின் ஆடியோ மார்க்கெட்டும்தான்! முன்பெல்லாம் மியூசிக் டைரக்டருக்கு கொடுக்கிற சம்பளத்தையும், அதற்கான ரெக்கார்டிங், பாடகர் செலவுகளையும் இந்த ஆடியோ உரிமையாளர்களிடம் இருந்து மீட்டு வந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்கள் (தயாரிப்பாளர்கள்தான்...) இப்போது வெறும் குதிரையை மீட்ட சுந்தரபாண்டியன்களாகி விட்டார்கள்.

'நம்ம பாட்டு நாலு கடையில வித்தா சரி...' என்கிற மனப்பான்மைக்கு அவர்களை தள்ளியது எது?

இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், மார்க்கெட்டுக்கு புதிதாக வருகிற ஒரு ஆடியோ நிறுவனத்திற்கு ரெட் கார்ப்பெட் போடுகிற கடமையும் நமக்கு இருக்கிறது. அந்த வகையில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா' என்று வ.வினோத்குமாருக்கு அழைப்பு விட தயாராக இருக்கிறது தமிழ் திரையுலகம்.

ட்ரிப்பிள் வி ரெக்கார்ட்ஸ் என்ற புதிய இசை நிறுவனத்தை துவங்கியிருக்கிறார் வினோத்குமார். லண்டனில் தொழில் நுட்பம் பயின்ற வித்தகர் இவர். (அதைவிடுங்க. வசந்த் அண் கோ வசந்தின் செல்ல மகன் என்றால் டக்கென்று புரிந்து கொள்வீர்கள்)

யூசுப், பிரேம்ஜி அமரன், மலேசியா சத்யா ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான விழியும் செவியும் என்ற இசை ஆல்பம்தான் இவர்களின் முதல் வெளியீடு. அதற்கப்புறம் தனது சகோதரர் வசந்த் விஜய் நடித்த தெரியாம உன்னை காதலிச்சுட்டேன், என்னமோ நடக்குது ஆகிய இரு படங்களின் ஆடியோவையும் இந்த நிறுவனமே வெளியிட்டிருக்கிறது.

விரைவில் முன்னணி ஹீரோக்கள் இருவரது புதுப்பட ஆடியோவையும் ட்ரிப்பிள் வி ரெக்கார்ஸ் நிறுவனமே வெளியிடப் போகிறதாம். இதற்கான ஒப்பந்த பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறார் வ.வினோத்குமார்.

புதிதாக வந்திருக்கும் குட்டி தொழிலதிபர் வினோத் என்ன சொல்றாருன்னா... நிறைய பிரைவேட் ஆல்பங்களை வெளியிடப் போறோம். திறமையும் தகுதியும் உள்ள மியூசிக் டைரக்டர்ஸ், பாடகர்கள், பாடலாசிரியர்கள் யாராக இருந்தாலும் ட்ரிப்பிள் வி ரெக்கார்ஸ் நிறுவனத்தின் கதவை தட்டலாம். தட்டிய கை திறமையான கையா இருந்தா மோதிரம் போட நாங்க ரெடி!

வினோத்குமாரின் அழைப்புக்கு தயாராக இருப்பவர்கள் இப்பவே கிளம்புங்க! 

No comments:

Post a Comment

Designed By Blogger Templates