ஐதரபாத்தில் தஞ்சமடைந்திருக்கிறார் அஞ்சலி. சித்தி கொடுமை, மு.களஞ்சியத்தின் டார்ச்சர் என்று அவர் அடுக்கடுக்காக அங்கிருந்து இடி மின்னல் தகவல்களை அஞ்சலி வெளியிட்டுக் கொண்டிருக்க, பதிலுக்கு இங்கிருந்தும் கிளம்புகிறது பலத்த இடி சத்தம். அஞ்சலியின் ரகசியங்களை வெளியிடுவேன் என்கிறார் மு.களஞ்சியம்.
இத்தனை நாளாக நான் அவரை அஞ்சலியின் அம்மான்னு நினைச்சுருந்தேன். அவங்க சித்திதானாம்ல... என்று களஞ்சியம் வியப்பதை சற்று ஆச்சர்யத்தோடு கவனிக்கிறது சினிமா வட்டாரம். போகிற போக்கை பார்த்தால் இந்த பிரச்சனை இப்போது முடியாது போலிருக்கிறது.
ஐதராபாத்திலிருந்து அஞ்சலி பேசியது என்ன?
''நான் இதுநாள் வரை அம்மா என்று கூறி வந்த பாரதி தேவி, என் அம்மா கிடையாது. அவர், என் அம்மாவின் தங்கை. சித்தி. என் சொந்த அம்மாவும், அப்பாவும் ஆந்திராவில் இருக்கிறார்கள்.
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. என் சொந்த அம்மா, அப்பா யார் என்பதை சொன்னால், அவர்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும். அதனால் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
இதுவரை நான் பாரதிதேவி, டைரக்டர் களஞ்சியம் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தேன். இருவரும் சேர்ந்து, ''அந்த படத்தில் நடி, இந்த படத்தில் நடி, அங்கே போ, இங்கே போ'' என்று என்னை கட்டாயப்படுத்தினார்கள். என்னை ஒரு 'ஏ.டி.எம்.' மிசின் போல் பயன்படுத்தினார்கள்.
தாங்க முடியாத அளவுக்கு இரண்டு பேரும் சேர்ந்து என்னை கொடுமைப்படுத்தினார்கள். அதை விளக்கமாக வெளியில் சொல்ல முடியாது. பல சமயங்களில் என்னை மறைத்து வைத்திருந்தார்கள். நிருபர்களிடம் பேசக்கூட அனுமதிக்க மாட்டார்கள். சில விஷயங்களுக்காக என்னை அடித்தார்கள். சமீபத்தில், 'ஊர் சுற்றி புராணம்' என்ற படப்பிடிப்பில் எனக்கு மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டது. அந்த சமயத்தில் கூட, என்னை ஓய்வு எடுக்க அனுமதிக்கவில்லை. சில முக்கிய பிரமுகர்களுடன் என்னை இணைத்து, கிசுகிசுக்களை பரப்பினார்கள். என்னை 'பிளாக்மெயில்' செய்தார்கள்.
நான் சம்பாதித்த பணம், சொத்துக்கள் முழுவதும் அவர்கள் பெயரில்தான் இருக்கிறது. வளசரவாக்கத்தில் உள்ள வீடு மட்டும் என் பெயரில் இருக்கிறது. எனக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், அந்த வீட்டைக்கூட வேண்டாம் என்று அங்கிருந்து வெளியேறி விட்டேன். இப்போது நான் ஆந்திராவில் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால், எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை சொல்ல மாட்டேன். எனக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன்.
நான் யாருடனோ ஓடிப்போய்விட்டதாகக் கூட, வதந்தியை பரப்புவார்கள். அதனால்தான் உங்களிடம் பேசுகிறேன். இனிமேல் நான் பாரதிதேவியுடன் சேர்ந்து வாழ மாட்டேன். என் சொந்த காலில் நிற்க பழகிக்கொள்ள வேண்டும். எனக்கு ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட, அதற்கு பாரதிதேவியும், களஞ்சியமும்தான் காரணமாக இருப்பார்கள். இரண்டு பேர் மீதும் போலீசில் புகார் செய்யலாமா? என்று யோசித்து வருகிறேன்.''
இதுதான் அஞ்சலியின் அதிர்ச்சிகரமான பேட்டி. அதற்கப்புறம் சித்தி பாரதி தேவியையும், டைரக்டர் மு.களஞ்சியத்தையும் சல்லடை போட்டு தேடியது மீடியா. எப்படியோ ஒரு சிலருக்கு மட்டும் சிக்கிய இருவரும் அவசர அவசரமாக அஞ்சலியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பளித்துவிட்டு செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். அவர்கள் மறுப்பு இதோ
பூமணி, பூந்தோட்டம், கிழக்கும் மேற்கும், கருங்காலி ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், களஞ்சியம். நடிகை அஞ்சலி கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது:-
''அஞ்சலியை நான்தான் சினிமாவுக்கு அறிமுகம் செய்தேன். 'சத்தமில்லாமல் முத்தமிடு' என்ற படத்தில், நடிகை தேவயானியின் தம்பி ஜோடியாக அஞ்சலியை நடிக்க வைத்தேன். அந்த படம் வெளிவரவில்லை. முதல் பட டைரக்டர் என்ற முறையில், அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு பழக்கம் இருந்தது.
குடும்ப நண்பர் என்ற முறையில், நான் அவர்களுக்கு சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். பாரதிதேவி அஞ்சலியின் தாயார் இல்லை என்பது, எனக்கு அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. அவர் அஞ்சலியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுவது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது.
ஒரு காலத்தில், அஞ்சலியின் தாயாருக்கு நான் சில ஆலோசனைகளை சொல்லியிருக்கிறேன். அதை மனதில் வைத்துக்கொண்டு இந்த பிரச்சினையில் அஞ்சலி என்னை இழுத்து விட்டு இருக்கிறார். இப்போது அஞ்சலி குடும்பத்தினருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது.
அஞ்சலி சம்பாதித்த பணத்தை எல்லாம் நான் சுருட்டி விட்டதாக கூறியிருக்கிறார். இதை அவர் நிரூபிக்க முடியுமா? நிரூபிக்காவிட்டால் நான் அவரை சட்ட ரீதியாக சந்திப்பேன்.
என்னை பற்றி தவறாக கருத்து தெரிவித்து விட்டதாக நாளையே அஞ்சலி மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அஞ்சலி பற்றிய சில ரகசியங்களை நான் வெளியிட வேண்டியிருக்கும்''. மேற்கண்டவாறு டைரக்டர் களஞ்சியம் கூறினார்.
அஞ்சலி கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி பாரதி தேவியிடம் கேட்டதற்கு, ''அஞ்சலி இப்படியெல்லாம் கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது'' என்று மட்டும் கூறிவிட்டு, போனை 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார்.
No comments:
Post a Comment