
அக்ஷரா கமல்ஹாசன்
கடல்' படத்துக்கான ஹீரோயின்களில் முதல் சாய்ஸ் அக்ஷராவுக்கு இருந்ததாக சொல்லப்படுகிறது. படத்துக்கான போட்டோ ஷூட் எடுக்கப்பட்டு கடைசியில் என்ன நினைத்தாரோ மணிரத்னம், ""இந்தப் படம் உனக்கு வேண்டாம்'' என சொல்லி விட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.
மியூசிக், தியேட்டர் பெர்ஃபாமன்ஸ் என படிக்கப் போன அக்ஷரா சினிமாவுக்கு வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்ருதிஹாசனைத் தொடர்ந்து உலக நாயகனின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வரும் அக்ஷராவுக்கு, அக்கா மாதிரியே பாலிவுட்தான் குறி. பாலிவுட் வாய்ப்புக்காக எப்போதும் மும்பை வாசத்தில் அம்மா சரிகாவின் அரவணைப்பில் இருக்கும் அக்ஷராவை, சரியான திட்டமிடலுடன், தேர்ந்த கதையில் களம் இறக்குவதற்காக சரிகாவே கதைகளை கேட்டு வருகிறாராம்.
பாலிவுட்டின் இயக்குநர்களை கவர, போட்டோ ஷூட் ஒன்றைச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார் சரிகா. இந்த வருட கடைசியில் நிச்சயம் சினிமா பிரவேசம் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது அக்ஷராவின் வட்டாரம்.
திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானாலும், வருங்காலத்தில் இயக்குநராவதுதான் அக்ஷாராவின் லட்சியமாம்.
சண்முகபாண்டியன் விஜயகாந்த்
வைஸ் கேப்டன் ரெடி. விஜயகாந்தின் மூத்த மகன் விஜய் பிரபாகரன்தான் முதலில்சினிமாவுக்கு வருவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது மகன் சண்முகபாண்டின் முதலில் களம் இறங்குகிறார். தன் பரம்பரை வழி பெயரான சண்முகபாண்டின் என்ற பெயரைத் தன் இளைய மகனுக்கு வைத்துள்ளார் விஜயகாந்த்.
துளியும் சினிமா ஆசை இல்லாமல் லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்துக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு நாள், அப்பாவிடம் சினிமாவில் நடிக்க வேண்டும் என போய் நிற்க, உடனே ""ஓ.கே. தம்பி. பண்ணிரலாம்'' என்ற வார்த்தை வந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்புவரை தம்பி ஏகபோக வெயிட். ஒவ்வொரு நாளும் கடுமையான உடற்பயிற்சிகளால் தன்னைச் செதுக்கி வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அப்பா விஜயகாந்துக்கே கிரிக்கெட் சொல்லிக் கொடுத்து அதன் மேல் ஆர்வம் வர வைத்தவர் தம்பிதான். ஓய்வு நேரங்களை கிரிக்கெட்டுக்கே அதிகமாக செலவிடும் இவருக்கு ஆக்ஷன் படங்கள் மீது கொள்ள ஆசை.
கிட்டத்தட்ட மூன்றாயிரம் ஆக்ஷன் சினிமா டி.வி.டி.க்களை வீட்டில் பாதுகாத்து வருகிறார். சுவரில் கால்வைத்து எதிரியை உதைக்கும் அப்பாவின் ஆக்ஷன் படங்கள் அனைத்தும் இதில் அடக்கம். விஜயராஜ் சினிமாவுக்காக விஜயகாந்த் ஆனது மாதிரி, சண்முகபாண்டியன் பெயரும் மாறலாம் என்கிறார்கள்.
21 வயதாகும் சண்முகபாண்டியனுக்கு பிடித்த நடிகை எமி ஜாக்சன்தாம். பிடித்த நடிகர் யாராக இருக்க முடியும். அப்பா விஜயகாந்துதான். பிடித்த படமும் அப்பா நடித்த "கேப்டன் பிரபாகரன்'தான்.
விக்ரம் பிரபு
அன்னை இல்லத்திலிருந்து அடுத்த வரவு விக்ரம் பிரபு. சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் என்ற பெரிய அடையாளத்தோடு கோடம்பாக்கத்தில் உலா வர காத்திருக்கும் "கும்கி' நாயகன்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மகாணத்தில் உள்ள சாண்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டியில் தியேட்டர் பெர்ஃபார்மன்ஸஸ் தொடங்கி கார்பெண்டரி, ஆடை வடிவமைப்பு, இயக்கம், நடிப்பு என சினிமாவின் ஏ டூ இசட் படித்து சென்னை திரும்பியவர் விக்ரம் பிரபு.
"சர்வம்' படத்தில் இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு உதவியாளராக வேலை பார்த்தவருக்கு, நிச்சயம் இயக்குநராக வேண்டும் என்பதில்தான் குறி இருந்திருக்கும். ஆனால் திடீரென்று ஒரு நாள், தயங்கி தயங்கி ""சினிமாவில் நடிக்கணும் போல் இருக்கு'' என தன் தந்தையிடம் விருப்பத்தைச் சொல்ல, ""தம்பி இதோ பார். நீ நினைக்கிறது மாதிரி இது சாதாரணம் இல்லை.
இப்ப நிறைய போட்டி இருக்கு. எப்போதும் உழைச்சிக்கிட்டே இருக்கணும். அப்படி செய்தால்தான் சினிமாவில் நிக்கமுடியும்''ன்னு சொன்னாராம் பிரபு.
லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபுசாலமன் இயக்கும் படத்துக்கு புதுமுகங்கள் தேவைப்படவே, விக்ரம் பிரபு லிங்குசாமியையும் பிரபுசாலமனையும் சந்தித்ததார். இருவருக்கும் விக்ரம் பிரபுவை பிடித்து போகவே, "கும்கி' படத்தின் நாயகனாகி விட்டார்.
சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு இந்த மூவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு. அது இதுதான். சிவாஜி "பாரசக்தி'யில் அறிமுகமான ஆண்டு 1952. "சங்கிலி' படத்தின் மூலம் பிரபு திரைக்கு வந்த ஆண்டு 1982. இப்போது "கும்கி' மூலம் விக்ரம் பிரபு அறிமுகமாகும் ஆண்டு 2012.கௌதம் கார்த்திக்
முத்துராமன் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகர். மணிரத்னம் படத்தின் நாயகன். சென்னையில் பள்ளி பருவம் முடிந்ததும், பி.டெக் படிக்க பெங்களூருக்கு அனுப்பி வைத்தார் கார்த்திக். மாதம் ஒரு முறை மட்டுமே சென்னை வந்து போனார் கௌதம். சென்னை வந்த ஒரு நாளில் மணிரத்னம் வீட்டு நிகழ்ச்சிக்காக கௌதமையும் அழைத்துப் போனார் கார்த்திக். சின்ன வயதில் பார்த்த கௌதம், நெடு நெடுவென வளர்ந்திருப்பதை கண்டு மணிரத்னம் ஆச்சரியப்படவே, ""இவனை உங்க படத்துல ஹீரோவாக்கிடுங்க. நல்லாயிருக்கும்'' என விளையாட்டாக தன் கணவரிடம் சொல்லியிருக்கிறார் சுஹாசினி.
நாள்கள் கடந்தன. ""என் படத்தில் உன் மகன் நடிப்பானா?'' என மணிரத்னம் கார்த்திக்கிடம் கேட்க, அவனிடமே கேளுங்கள் என கான்பிரன்ஸ் கால் போட்டு தந்திருக்கிறார். ""இப்போது அப்படி ஒரு ஆசை இல்லை'' என கௌதம் கூற, மணிரத்னத்துக்கோ ஆச்சரியம். இன்னும் சில நாள்கள் கடந்த பின் கேட்க, ""நடிக்கிறேன்'' என சம்மதம் தெரிவித்திருக்கிறார் கௌதம். இதுதான் "கடல்' படத்தில் கௌதம் ஹீரோவான கதை.சினிமாவில் அப்பா கார்த்திக்தான் ரோல் மாடல் என சொல்லும் கௌதமுக்கு, அப்பா நடித்ததில் பிடித்த படங்கள் "அக்னி நட்சத்திரம்', "அமரன்'
.
"அலைகள் ஓய்வதில்லை' படத்தில் கார்த்திக் - ராதா அறிமுகமானது போல், இந்த படத்தில் கௌதமுடன் அறிமுகமாகிறார் ராதாவின் இளையமகள் துளசி நாயர்.
வரலட்சுமி சரத்குமார்.
அப்பா பாதி.. அம்மா பாதி.. கலந்த கலவை வரலட்சுமி. அப்பா பாதியில் கம்பீரமும் அம்மா பாதியில் வசீகரமும் இவரின் அழகு சீக்ரெட். சிம்புவின் ஜோடியாக "போடா போடி'யில் அறிமுகமாகி நீண்ட நாள்களாக சினிமா எண்ட்ரி டிரைய்லர் காட்டிக் கொண்டே இருக்கிறார்.
""இவர் படத்தில் நடிக்கிறார். அவர் இயக்கத்தில் நடிக்கிறார்'' என ஆரம்பத்தில் பல செய்திகள்.
ஆரம்பத்தில் பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாத வரலட்சுமி, தைரியத்தோடு சிம்பு படத்தில் இடம் பிடித்தார். மீடியாக்கள்தான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்ததாக அவரே சொல்லுவார். பேஷன் டிசைனிங் மீது ஆர்வம் செலுத்தி வந்தவரை, சினிமாவுக்கு வரப்போவதாக தினமும் செய்திகள் வெளியிட்டு அவரை உண்மையாகவே சினிமாவுக்கு இழுத்து வந்துவிட்டன மீடியாக்கள்.
அவரும் நடித்துதான் பார்க்கலாமே என்று களம் இறங்கி விட்டார். அமெரிக்காவில் படித்த வரலட்சுமிக்கு, சிம்பு சொன்ன கதையும் பொருத்தமாகவே இருந்தது. ""இங்கேயிருந்து அமெரிக்கா செல்லும் பையனுக்கும், அமெரிக்காவில் படிக்கும் ஒரு பெண்ணுக்கும் காதல், இதுதான் படத்தின் ஒன் லைன்'' என்றதும். ஓ.கே. நான் நடிக்கிறேன் என்று கையெழுத்து போட்டு விட்டார்.படத்தின் ஒரு ஷெட்யூல் மீதம் இருக்கும் நிலையில், வேறு எந்த படத்திலும் நடிக்காமல் "போடா போடி' வெளிவரக் காத்திருக்கிறார்.
குறளரசன் ராஜேந்தர்இந்த வருட கடைசியில் நிச்சயம் குறளரசனின் சினிமா விஜயம் இருக்கும் என்கிறது டி.ஆர். வட்டாரம். சிம்புவின் சினிமா அத்தியாயத்தை தொடங்கி வைத்த டி.ஆரே, தன் இளைய மகன் குறளரசனுக்கும் கதை தயார் செய்து வருகிறார்.
சிம்புவை போலவே குறளரசனும் சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்து விட்டார். சிம்பு தொடர்ந்து சினிமாவில் இருக்க, படிப்புக்காக சினிமாவை ஒதுக்கி வைத்து விட்டார் குறள். ""நீயும் சினிமாவுக்கு வந்துடு''ன்னு டி.ஆர். சொல்லும் போதெல்லாம், ""முதலில் படிக்கிறேன். அப்புறம் நடிக்கிறேன்'' என அப்பா பாணியில் அப்பாவுக்கே பதில் சொன்னவர், இப்போது படிப்பு முடிந்ததால், ""நடிக்கிறேன். ஒரு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க''ன்னு டி.ஆரிடம் சொல்ல, ""உனக்கெனவே ஒரு கதை வைத்திருக்கிறேன். வா. பட்டையை கிளப்பலாம்'' என கிளம்பிவிட்டார் டி.ஆர்.
தானே இயக்கி நடிக்கும் "ஒரு தலை காதல்' படம் முடிந்ததும், பரபரக்கும் ஸ்கிரிப்ட்டோடு குறளுக்கான படத்தை ஆரம்பிக்கிறார். இதற்கிடையே நடனம், சண்டை, உடற்பயிற்சின்னு சினிமாவுக்கு குறளும் தயாராகி விட்டார். ""சின்ன வயதிலேயே ஸ்டேட் அவார்டு வாங்கியவன் குறள். அவனுக்காகவே நான் வெச்சிருக்கேன் ஒரு தனல்''என்று தன் பாணியில் தலை கோதி உரக்க சிரிக்கிறார் டி.ஆர்.
No comments:
Post a Comment