மு.க.ஸ்டாலினின் வாரிசு உதயநிதியோடு ஜோடி சேர்ந்த ஹன்சிகா மோத்வானி, அடுத்து சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகனான பாஸ்கரனுடன் டூயட் பாடப்போகிறார்.‘முன்னணி ஹீரோவுடன் மட்டுமே இனி நடிப்பேன்’ என்று அடம்பிடித்தவரிடம், ‘புதுமுகம் உதயநிதிகூட நடிப்பே, பாஸ்கரன்கூட நடிக்க மாட்டியா?’ என்று மேல் மட்டத்தில் இருந்து மிரட்டல் குரல் கேட்க… உடனே பயந்துபோய் தலையாட்டினாராம். ‘தலைவன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும் பாஸ்கரனை சந்தித்தோம்.
”உண்மையில் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க இருந்த ஒரு படத்தின் தலைப்புதான் ‘தலைவன்’. நான்எம்.ஜி.ஆரின் பரமரசிகன். அதனால் அந்த டைட்டிலையே சூட்டினோம். எம்.ஜி.ஆர். படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் ஜோசப் இப்போது உயிரோடு இல்லை. திருவனந்தபுரத்தில் வசிக்கும் அவருடைய மகளிடம் முறைப்படி எனது தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் அனுமதி வாங்கி இருக்கிறார். இந்த உண்மையை உணராமல் யாரும் வாய்க்கு வந்தபடி பேசக் கூடாது. யாருடைய தலைப்பையும் தட்டிப்பறிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.”
”அரசியலுக்குள் நுழையாமல் திடீர் சினிமா பிரவேசம் எதற்கு?”
‘இது திடீரென எடுத்த முடிவல்ல. ஒரு வருடத்துக்கு முன்பே திட்டமிடப்பட்டது. நான் அரசியலில் எப்போதுமே தலையைக் காட்டியது இல்லை. நான் உடற்பயிற்சி செய்து உடம்பை ட்ரிம்மாக வைத்திருப்பதைப் பார்த்த தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன், ‘என்னோட தயாரிப்புல நடிக்குறீங்களா?’ என்று கேட்டார். எனக்கும் அந்த ஆசை இருந்ததால், உடனே ஓகே சொன்னேன்.”
”உங்கள் படத்தில் விஜயகாந்த்தின் ஆஸ்தான டைரக்டர், ‘உளவுத் துறை’ ரமேஷ் கிருஷ்ணன், ஆஸ்தான கேமராமேன் ’விருதகிரி’ பூபதி என்று எல்லாம் அவரது ஆட்களாக இருக்கிறார்களே?”
”விஜயகாந்த் படத்தை டைரக்ஷன், ஒளிப்பதிவு செஞ்சிட்டா, உடனே அவரோட ஆளு ஆயிடுவாங்களா? அவங்க டெக்னிஷீயன்கள்தான், கட்சி உறுப்பினர் கிடையாது. அவர் குடும்பத்தில் இருந்து மட்டும் சினிமாவில் நடிக்க வாரிசு வரலாம். எங்கள் குடும்பத்தில் இருந்து வரக் கூடாதா? என்னோட உருவ அமைப்புக்கு ஆக்ஷன் நல்லா வரும்னு எல்லாரும் சொன்னாங்க. இனிமே, விதவிதமான ஆக்ஷன் ரோலில் நடித்து விஜயகாந்த்தை வீழ்த்திக் காட்டுவேன்.”
”உங்கள் சித்தி சசிகலாவுக்கு ‘தலைவன்’ படப்பாடலைப் போட்டுக் காட்டினீர்களா?”
”இதுவரை இல்லை. நீங்கள் சொன்ன பிறகே அதுபற்றி யோசித்துப் பார்க்கிறேன்” என்றபடி ‘தலைவன்’ இசையில் மூழ்கினார்.

No comments:
Post a Comment