Breaking News

Sunday, 1 July 2012

அது வேற, இது வேற... விளக்கினார் மிஷ்கின்


பீட்சாவுக்கு ஆசைப்பட்டவருக்கு, அண்ணாச்சி கடை 'வரிக்கி'தான் கிடைக்கும்போலிருக்கு என்று ஆரம்பத்தில் மிஷ்கினின் 'முகமூடி' குறித்து கிசுகிசுத்தார்கள் சிலர். ஆனால் பீட்சாவுக்கும் வரிக்கிக்கும் நடுவில் மத்தியமாக ஒரு ஹீரோ கிடைத்தார் அவருக்கு. அவர்தான் ஜீவா.

சூர்யாவிடம்தான் இந்த கதையை முதலில் சொல்லியிருந்தார் மிஷ்கின். பட்ஜெட் முப்பத்தைந்து கோடி என்பதாக திட்டம். பொது மேடைகளில் 'அவன் என் தம்பி. மாடியிலேர்ந்து குதிரான்னா குதிச்சுருவான்' என்றெல்லாம் தனது படங்களின் ஹீரோக்களை பற்றி இஷ்டத்திற்கு 'அளக்கும்' மிஷ்கினின் அதிகப்பட்ட 'அடா புடா' அன்புக்கு பயந்தே இப்படத்தை மறுத்துவிட்டார் சூர்யா.

இதே முப்பத்தைந்து கோடி பட்ஜெட் என்பது சூர்யாவுக்கு பொருந்தும். ஜீவாவின் மார்க்கெட்டுக்கு பொருந்தாதே? அப்படியென்றால் கதையிலும் லொகேஷனிலும் என்ன மாற்றம் செய்தார் மிஷ்கின் என்றெல்லாம் தலையை பிய்த்துக் கொண்டார்கள் நிருபர்கள்.
 இதற்கெல்லாம் முடிவு கட்டுவது போல இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மீட்டிங்கில் விளக்கம் கொடுத்தார் மிஷ்.

'சூர்யாவுக்கு நான் சொன்ன முகமூடி கதை வேறு. ஜீவாவுக்கு நான் சொன்ன முகமூடி கதை வேறு'. இதுதான் மிஷ்கினின் விளக்கம். இவர் சொல்வது உண்மையென்றால் இந்த படத்தின் ஓட்டத்தை பொறுத்து முகமூடியின் ரெண்டாம் பாகம் தயாராகலாம். அதிலாவது சூர்யா நடிப்பாரா?

No comments:

Post a Comment

Designed By Blogger Templates