Breaking News

Monday, 4 June 2012

இலங்கையில் தனி ஈழம் மலர வேண்டும் என்பதே கனவு: கருணாநிதி


Karunanidhi 89th Birthday
இலங்கையில் தனித் தமிழீழம் மலர வேண்டும் என்பதே தமது பிறந்த நாள் செய்தி என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனபக்குவம் ஆட்சிக்கும், கட்சிக்கும், தலைவருக்கும் வந்தால்தான் உண்மையான வெற்றி பெறமுடியும். தி.மு.க. அரசு 15 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. மக்களை எப்படி மதிக்கவேண்டும் என்றும், மக்கள் குரலே மகேசன் குரல் என்றுதான் பணியாற்றி உள்ளோம்.
நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் மூலமாக ரூ.1,500 கோடி போடப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை வாழவைப்பதற்காக இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் வரியே இல்லாத பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் போட்டிருக்கிறோம். அ.தி.மு.க. அரசு ஒராண்டில் மட்டும் ரூ.18,836 கோடி அளவுக்கு வரிச்சுமையை ஏற்றி விட்டு, ஏழைகள் அரசு என்று கூறுகிறார்கள்.
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் பல்வேறு வரிகளை மனம்போல் உயர்த்திவிட்டு, மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்கவேண்டும் என்று சொல்வதைப் பார்த்து மக்கள் சிரிக்க மாட்டார்களா? தி.மு.க. அன்றும், இன்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. கூட்டணியில் இருந்தாலும், அவர்கள் வரி விதித்தபோதெல்லாம் எதிர்த்திருக்கிறோம்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தோம். அதே நேரத்தில் இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்தபோது எதிர்த்துள்ளோம். இதனால் 800 பேர் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். ஆளும் கட்சி மக்களுக்கு எதிரான காரியங்களை செய்யும்போதெல்லாம் வெளியேறி இருக்கிறோம். பாரதீய ஜனதா கட்சியில் யோக்கியமானவர்கள் ஒருவர் வாஜ்பாய். அப்படிப்பட்ட அவரது தலைமையையே ஏற்க முடியாது என்று வெளியேறி இருக்கிறோம். மதசார்ப்புடைய அரசாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்ததாலும் வெளியேறினோம்,
இலங்கையில் சிங்களர் இனம் வேறு, தமிழர் இனம் வேறு என்ற நிலை உள்ளது. தமிழர்களுக்கு சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக டெசோ மாநாட்டை மீண்டும் தமிழகத்தில் நடத்தவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். இதை நான் பிறந்தநாள் செய்தியாக சொல்கிறேன். விரைவில் விழுப்புரத்தில் திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து டெசோ மாநாடு ஆகஸ்ட் 5- ந் தேதி நடத்தப்பட உள்ளது. விரைவில் இலங்கையில் தனி ஈழம் உருவாகவேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் செய்தியாகும் என்றார் கருணாநிதி.

No comments:

Post a Comment

Designed By Blogger Templates